வேலை வாங்கி தருவதாக பண மோசடி; தி.மு.க., பிரமுகர் உட்பட இருவருக்கு சிறை
குன்னுார் ; குன்னுாரில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய, தி.மு.க., பிரமுகர் உட்பட இருவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குன்னுார் அதிகரட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோகி, 67. குன்னுார் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, தி.மு.க., வார்டு கிளை செயலாளர் ரகீம், 68, ஆகிய இருவரும், கடந்த 2013ல், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, குன்னுாரை சேர்ந்த அனிதா, சந்தோஷ்குமார், சதீஷ்குமார், மஞ்சுநாதன் ஆகியோரிடம், 14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றிருந்தனர்.வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், பணத்தை திருப்பி தர கேட்டும் தரவில்லை. குன்னுார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குன்னுார் ஜுடிஷியல்கோர்ட்டில், இந்த வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்சலாம், நேற்று இதற்கான தீர்ப்பு வழங்கினார். அதில், இருவருக்கும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், பணம் வழங்கியவர்களுக்கு, மொத்தம், 26 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை, 2 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.