மலை பாதையில் முன்பதிவில்லாத ரயில் அவசியம்
குன்னுார்: குன்னுார் –மேட்டுப்பாளையம் மலைபாதையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த கட்டணத்தில் மலை ரயில் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுார்– மேட்டுப்பாளையம் மலைப்பாதை நிலச்சரிவு சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்கள் கோத்தகிரி வழியாக சுற்றி மேட்டுப்பாளையம் மற்றும் கோவைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல, போதுமான பஸ் வசதியும் இல்லாததால் கல்லூரி மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது, குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வழக்கமான மலை ரயிலில் முன்பதிவில் இரண்டாம் வகுப்பு கட்டணம், 190 ரூபாய்; முதல் வகுப்பு கட்டணம்,445 ரூபாய் ஆகவும் உள்ளது. ஆனால், வழக்கமான ரயிலில் சுற்றுலா பயணிகளின் முன்பதிவு அதிகம் இருப்பதால், அவசர தேவைக்குச் செல்லும் உள்ளூர் மக்கள் பயணம் செய்ய முடிவதில்லை. இதனால், ‘முன்பதிவில்லாத தனி ரயில் குன்னுார் மேட்டுப்பாளையம் இடையே இயக்க வேண்டும்,’என, நீலகிரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, குன்னுார்– மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் மட்டும் உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் மலை ரயில் சேவையை இயக்க மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.