புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்கள் பதிவேற்றம் கட்டாயம்; தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை
ஊட்டி; 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாக்களில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. தவிர, தனியார் கட்டட வேலைகளும் அதிக அளவில் நடக்கிறது. இப்பணிகளுக்கு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றன.அனைத்து தோட்டங்களில் பணிபுரியும் மாநிலம் விட்டு, மாநிலம் இடம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.அதில், தொழிலாளர் நலத்துறை மூலம் உருவாக்கப்பட்ட ஐ.எஸ்.எம்., வலைதளத்தில், 'அந்தந்த தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தொழிலாளர்களின் விபரத்தை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்,' என , தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் துறை ஆணையர் லெனின் கூறுகையில்,''மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை கட்டாயம் அதற்கான வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பதிவேற்றம் செய்யாமல் பணிபுரிய அனுமதிக்க கூடாது. அவ்வாறு, அனுமதிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.