அரசு பள்ளியில் மாணவர்களால் விளைவிக்கப்படும் காய்கறி; சத்துணவு சமையலுக்கு பயன்படுத்தி அசத்தல்
ஊட்டி; ஊட்டி அரசு பள்ளியில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மாணவர்களின் சத்துணவு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறை கல்வியுடன், தொழிற் கல்வி, தோட்டக்கலை பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதில், பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை துாய்மை படுத்தி தோட்டம் அமதை்து, இயற்கை காய்கறி பயிரிடுவதால் அவர்களுக்கு பயிற்சி ஏற்படுகிறது.இதனால், மாணவர்களுக்கு விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது மாணவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தும். இயற்கை முறையில் சாகுபடி
இந்த முறையில், ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் ராஜ்குமார் மாணவர்களை ஒருங்கிணைத்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான உணவுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். பள்ளி வளாகத்தில் இயற்கை உரம் தயாரித்து, அதன் மூலம் மாணவர்களை கொண்டு, மலை காய்கறிகளான முள்ளங்கி, பீட்ரூட், கேரட், உருளைகிழங்கு, பச்சை கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட மலை காய்கறிகளை விளைவித்துள்ளார்.ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெரும் பயன் ஏற்படும்.பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில்,''இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி வளாகத்தில் இயற்கை உரம் தயாரித்து, அதன் மூலம் மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைவிக்கப்படும் காய்கறிகள் சத்துணவு கூடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காய்கறிகளுக்கு அதற்கு உண்டான பணம் வாங்கப்பட்டு, அதில், விதைகள் வாங்கப்பட்டு சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாணவகள் வகுப்பு நேரம் போக விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்,'' என்றார்.