நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாத கிராம சந்தை; சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் அதிருப்தி
குன்னுார்; குன்னுார் இளித்தொரை பகுதியில் நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கும் கிராம சந்தை சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.நீலகிரி விவசாயிகள், வியாபாரிகள் மின்னணு வர்த்தகத்தின் மூலம் விவசாய பொருட்களை எளிதாக விற்கவும் வாங்கவும் வழி செய்யும் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கும் திட்டத்தின் கீழ், குன்னுார் எடப்பள்ளியில், 2 கோடி ரூபாய் மதிப்பில் வேளாண் சந்தை வளாகம் (மண்டி) அமைக்க, 2021ல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த சந்தை இளித்தொரை கிராமம், அரசு கொறடா ராமச்சந்திரன் வீட்டின் அருகில், 6.5 ஏக்கரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த, 2024 மார்ச் 13ல், ஒருங்கிணைந்த வேளாண் வணிக வளாகம் என்ற பெயரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். ஆனால், இந்த மையம் செயல்படாமல். அருகில் உள்ள அறைகள், பசுந்தேயிலை குடோனாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. செயல்படாத கிராம சந்தை
மேலும், கடந்த, 2020ல் குன்னுார் எடப்பள்ளி அருகே நடுஹட்டி பஞ்., பெட்டட்டி என்ற பெயரில், 47.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராம சந்தை துவங்கப்பட்டு, 2021ல் பணிகள் நிறைவு பெற்றது. இந்த சந்தையும் இதுவரை திறக்கப்படாமல் பயனற்று கிடக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பயன்பாடுகளும் இல்லாத நிலையில், இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, 47.80 லட்சம் ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகள் பயன் பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த கட்டடங்களை உடனே செயல்படுத்த அரசு கொறடா நடடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் இவ்வாறு வைக்கப்படும் பட்சத்தில் மக்களின் வரி பணம் வீணாகும்,' என்றனர்.