உணவில் கலப்படம் செய்தால் புகார் செய்யலாம்விலை பட்டியல் வைக்காமல் இருந்தால் நடவடிக்கைஊட்டி: ‘சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரியில், உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; விலை பட்டியல் அவசியம் வைக்க வேண்டும்,’ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சுற்றுலா தலமாக விளங்குவதால் ஆண்டுக்கு, 30 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ‘இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களின் அத்தியாவசிய தேவையான, உணவு வகைகள், இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு வகைகளை தரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. உணவு துறையினர் ஆய்வு இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல்கள்; விடுதிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, பல்வேறு இடங்களில் அவ்வப்போது, ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், விதிகளை மீறி, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில், சில இடங்களில் தர மற்ற உணவு, கார வகைகளை விற்பனை செய்து வருவதால், சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்களை பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு வழிமுறைகளை உணவகங்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ‘ உணவு வகைகளில், கலப்பட பொருட்களை பயன்படுத்தக் கூடாது; இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக நிறமி சேர்க்கக் கூடாது; ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் சூடுப்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது; தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் முதற்கட்டமாக, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,’ என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் உள்ள அனுமதி பெற்ற ஆயிரக்கணக்கான உணவகங்களில் எக்காரணத்தை கொண்டும் தர மற்ற உணவுகளை விற்பனை செய்ய கூடாது. இனிப்பு மற்றும் காரவகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் கட்டாயம் உணவு பாதுகாப்புத் துறை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் ‘எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ’ உரிமம் பெற்ற தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும். உணவகங்களில் கட்டாயம் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும். விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் புகார் இருந்தால், 94440---–42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலக ‘வாட்ஸ் அப்’ எண்ணிற்கும் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம்,’ என்றனர்.