உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு; வனத்துறை வாகனத்தில் தண்ணீர் சப்ளை

வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு; வனத்துறை வாகனத்தில் தண்ணீர் சப்ளை

கூடலுார்; முதுமலை, மசினகுடியில் தொடரும் வறட்சியால், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை மசினகுடி கோட்டம் வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்கு வறட்சியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. தாவரங்கள் கருகி வருவதுடன், மரங்களில் இலைகள் காய்ந்து உதிர துவங்கியுள்ளன. வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று, வறட்சியான பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் ஊற்றி, விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இடம்பெயர துவங்கி உள்ளன. இதனை தவிர்க்க, வாகனங்களில் தண்ணீர் எடுத்து சென்று வறட்சியான பகுதிகளில் உள்ள தொட்டிகளில் சுழற்சி முறையில் குடிநீர் ஊற்றி வருகிறோம். கோடை மழை பெய்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி