உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடி மக்களுக்கான தொகுப்பு வீடு பணிகளை விரைவுப்படுத்தணும்...! புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு நிலம் ஒதுக்கணும்

பழங்குடி மக்களுக்கான தொகுப்பு வீடு பணிகளை விரைவுப்படுத்தணும்...! புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு நிலம் ஒதுக்கணும்

ஊட்டி; 'நீலகிரியில் பழங்குடியினருக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார்,கோத்தகிரி,குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில் பரவலாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

550 வீடுகள் கட்டத்திட்டம்

இவர்களுக்கு, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின்' திட்டத்தின் கீழ், 550 தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலும், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அதிக அளவில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 269 ச.அ., கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. ஒரு ஹால், படுக்கையறை, சமையலறை, கழிப்பறை ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டம் தற்போது பல கிராமங்களில் செயல்பட்டு வருகிறது.

விரைந்து முடிக்க கோரிக்கை

இந்நிலையில், ஊட்டி, கூடலுார் வட்டத்தில், ஆனைகட்டி, பொக்காபுரம், சிறியூர், கோத்தகிரி கடின மலை, கோப்பையூர், சுற்று வட்டார பகுதிகளின் பழங்குடியினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட இப்பணி , அஸ்திவாரத்தில் துாண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இதனால், பல இடங்களில் மழை காலத்தில் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 'இப்பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு விரைவுப்படுத்த வேண்டும்,' என, பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பழங்குடியின மக்கள் கூறுகையில், 'அரசின் தொகுப்பு வீடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு வீடு கட்ட நிலம் ஏதும் இல்லாததால் ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வசிக்கும் நிலையால் பல்வேறு சிரமங்களை சந்தத்து வருகிறோம். எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கும் இடமில்லாதவர்களுக்கு வீட்டு மனையுடன் இலவச வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். ஊரக வளர்ச்சி திட்ட முகமை அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டம் பணிகள் சில பகுதிகளில் நடந்து வருகிறது. நிதி நிலையை கருத்தில் கொண்டு பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. பணிகள் பாதியில் விடப்பட்ட பகுதிகளை விரைவில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை