பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ஊட்டி:புரட்டாசி மாதம் தமிழர் வாழ்க்கையில் ஆன்மிக முக்கியத்துவம் மிகுந்த மாதமாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் வாயிலாக பெருமாளின் அருளோடு சேர்த்து, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம் என்பது நம்பிக்கை. இந்நிலையில், நேற்று முன்தினம் மூன்றாவது சனிக்கிழமை துவங்கியது. ஊட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து, பெருமாள் ஷேச வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டம், மணிக்கூண்டு, லோயர் பஜார், மத்திய பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில், காபி ஹவுஸ் சதுக்கம், கமர்சியல் சாலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்ஜநேயர் கோவிலில், ஸ்ரீ ஆஞ்ஜநேய பெருமான் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி ( வேங்கட கிருஷ்ணன் ) பெருமாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருக்கோலத்தை கண்டு,'கோவிந்தா, கோவிந்தா; ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் சீதா ராம்' என பாடி சென்றனர். அலங்காரத்தினை கோவில் அர்ச்சகர் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.