பந்தலுார் வனப்பகுதியில் கொட்டப்படும் குப்பை; யானை உட்பட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம்
பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, ஊராட்சியில் வனப்பகுதியில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பந்தலுார் அருகே கூடலுார் பகுதியில் இருந்து, கேரள மாநிலம், வயநாடு செல்லும் சாலையில் நெலாக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. 15 வார்டுகளை உள்ளடக்கிய, ஊராட்சி நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல், அம் பலமூலா, குந்தலாடி, பொன்னானி ஆகிய கடை வீதிகளையும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களையும் உள்ளடக்கிய பகுதியாக உ ள்ளது. ஆனால், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல், தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை, சாலையோர வனப்பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் கடைவீதிகளை ஒட்டிய சாலை ஓரங்களில், கொட்டி வருகின்றனர். எரியூட்டப்படுவதால் சிக்கல் இந்த பகுதிகளில் கொட்டப்படும் குப்பை கழிவுகள், தினசரி எரியூட்டப்படுவதால் அதிலிருந்து எழும் புகை, பல்வேறு தொ ற்று நோய்களை பரப்பி வருகிறது. மேலும், வனப்பகுதிகளை ஒட்டி கொட்டப்படும் குப்பைகளை, யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உட்கொள்ள வருவதால், வனவிலங்கு -- மனித மோதல்களும், குப்பை கழிவுகளை உட்கொள்வதால், வன விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து வனத்துறை சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியதுடன், வனத்துறை பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, வனப்பகுதிகளை ஒட்டி கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை அகற்றினர். யானை வழித்தடத்தில் குப்பை எனினும், ஊராட்சி நிர்வாகம், வனப்பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில், குப்பை கழிவுகளை கொட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. நெலாக்கோட்டை பஜார் பகுதியை ஒட்டிய, யானைகள் வழித்தடத்தில் ஊராட்சி நிர்வாகம், தினசரி குப்பை கழிவுகளை கொட்டி வருவதால், அழகிய வனப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. அத்துடன் கழிவுகளில் உள்ள உணவு பொருட்களை, உட்கொள்ள வரும் வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் வனத்தை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உள்ளாட்சி நிர்வாகம், இதற்கு எதிராக செயல்படுவது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில், ''ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.