மத்திய அரசு அறிவித்த தேவாலா மலர் தோட்டம் எப்போது வரும்? மாநில அரசின் தாமதத்தால் அதிருப்தியில் மக்கள்
கூடலுார்; கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், மத்திய அரசு ஒதுக்கிய, 70 கோடி ரூபாய் நிதியில், 'தேவாலா மலர் தோட்டம்' அமைப்பது குறித்த எந்த நடவடிக் கையும் இல்லாத நிலை யில், உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் நாடுகாணி பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் சுற்றுலா தலம் அமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூடலுார் தோட்டக்கலை பண்ணையில், 70.23 கோடி ரூபாய் மதிப்பில், 'தேவாலா மலர் பூங்கா' அமைக்கப்படும் என, பிரதமர் மோடி கடந்த நவ., மாதம் அறிவித்ததுடன், நிதியும் ஒதுக்கினார். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த கூடலுார் மக்கள், பூங்கா அமைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்த்தனர். இடத்தை மாற்ற முயற்சி
இந்நிலையில், '45 ஆண்டுகளுக்கு மேலாக, 200 ஏக்கரில் தோட்டக்கலை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும், பண்ணை பகுதி வருவாய் துறை பதிவேட்டில், 'காடு' என, இருப்பதாகவும், வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்கவில்லை,' என, கூறி, மலர் பூங்காவை, கூடலுாரில் இருந்து, 50 கி.மீ., தொலைவில், சேரம்பாடி அருகே அமைக்க மாநில அரசு முடிவு செய்து, அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணிகளை துவங்கினர். இதற்கு கூடலுார் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மாநில அரசு இடத்தை மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு, ஏற்கனவே அறிவித்தபடி பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,' என, அவர்கள் வலியுறுத்தினர். முதல்வர் வந்தபோதும் அறிவிப்பு இல்லை
பிரச்னை குறித்து, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு, 'கூடலுாரில் ஏற்கனவே அறிவித்த இடத்தில் பூங்கா அமைக்கப்படும்,' மாநில சுற்றுலாத்துறை உறுதி அளித்தது. இதை தொடர்ந்து, நீலகிரிக்கு வந்த முதல்வர் இந்த திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால், கூடலுார் தொகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,' மத்திய அரசின் திட்டம் தொடர்பாக அரசு உத்தரவு ஏதும் இதுவரை எங்களுக்கு வரவில்லை,' என்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'மத்திய அரசு நிதி ஒதுக்கி அறிவித்த சுற்றுலா திட்டத்தை கூடலுாரில் ஏற்கனவே அறிவித்த இடத்தில் செயல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இப்பகுதியில் சுற்றுலா மேம்பட்டு, 200 குடும்பத்தினர் பயன் பெற வாய்ப்புள்ளது. அரசுக்கு சுற்றுலா வருமானமும் வரும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மக்கள் வாழ்வாதாரம் மேம்படும்...
கூடலுார் நாடுகாணி பகுதி ஆட்டோ ஓட்டுனர் செல்வம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணிகளின் நுழைவாயில் பகுதியான கூடலுாரில், சுற்றுலா பயணிகள் கவரக்கூடிய சுற்றுலா மையங்கள் ஏதுமில்லை. இந்நிலையில், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், மலர் பூங்கா அமைக்க கடந்த ஆண்டு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், இதுவரை திட்டம் துவங்கப்படவில்லை. இங்கு புதிய பூங்கா வந்தால் இரு மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். வியாபாரிகள் பயன் பெறுவர். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.