நீலகிரியில் நில உடைமை மேம்பாட்டு திட்டம் நிறைவேறுவது எப்போது? அதிகரிக்கும் லஞ்சத்தால் அவதிப்படும் மக்கள்
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் மூதாதையர் பெயர்களில் உள்ள கூட்டு பட்டாக்களை, வாரிசு தாரர்கள் பெயரில் மாற்றுவதில் உள்ள சிக்கல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநில அரசு, நில ஆவணங்களை சீரமைக்கவும், நில உரிமையாளர்களுக்கு தெளிவான பட்டா வழங்கவும் செயல்படுத்திய முக்கிய திட்டமான, நில உடைமை பதிவு மேம்பாட்டு திட்டம் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதனை செயல்படுத்துவதில், ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதனால், இங்கு காலங்காலமாக வாழும், 300 கிராமங்களை சேர்ந்த படுக மக்களின், ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களின் ஆவணங்களை, வாரிசு தாரர்கள் பெயர்களின் மாற்றுவதில் பிரச்னை தொடர்வதால், மூதாதையர் பெயர்களில் உள்ள கூட்டு பட்டாக்கள் மட்டுமே தற்போதும் நீடிக்கின்றன. அரசின் சான்றிதழ்கள் பெற சிக்கல்: இந்த ஆவண சிக்கலை சாதகமாக்கி, அனுபோக சான்று அடிப்படையில் விவசாயத்துக்கு வங்கிகளில் கடன் பெறும் போது, இத்தகைய சான்றுகள் உட்பட பிற சான்றுகளை பெற சில அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி நடக்கிறது. இந்த பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்வதால், ஏழை மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் எவ்வித பயனும் ஏற்பட வில்லை. லஞ்சம் 'சிஸ்டம்' ஆக்கப்பட்டது: லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''விவசாய கடன்களுக்கான அனுபோகசான்று உட்பட மக்களின் பல்வேறு சான்றுகளை பெற, வருவாய் துறை முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரையும், நில அளவை, கிராம நிர்வாகம், பத்திர பதிவு, தாசில்தார் அலுவலகங்கள் என, அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது 'சிஸ்டம்' ஆக்கப்பட்டுள்ளது. சில புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுத்தாலும், தவறு செய்தவர்கள் சிலர், எவ்வித அச்சமுமின்றி மீண்டும் வேறு இடங்களில் அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் பணியாற்றுகின்றனர். 'இது போன்ற லஞ்ச புற்றுநோயை வேரறுக்க, லஞ்சம், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம் தருவோம்' என்ற தற்போதைய அரசின் நடவடிக்கை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு அலுவலர்களின் இருக்கைகளிலும், 'நான் லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை கட்டாயம் வைக்க, அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். குன்னுார் தாசில்தார் செ ந்தில்குமார் கூறுகையில், ''இந்த பிரச்னைகள் குறித்து வருவாய் துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பட்டா பாஸ் புத்தகம்.. நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''கடந்த, 1984ல் இருந்து, 2000ம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களை மறு அளவீடு செய்து, பட்டா பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது. அப்போது, நீலகிரியில், சர்வே நடத்திய போது, 70 சதவீத மக்கள் தனி பட்டாவாக மாற்ற முன் வரவில்லை. இதனால், நில உடைமை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதற்கு தீர்வு கண்டு, பட்டா பாஸ் புத்தகம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''