உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகலில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை; வாகன போக்குவரத்தை நிறுத்திய வனத்துறை

பகலில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை; வாகன போக்குவரத்தை நிறுத்திய வனத்துறை

கூடலுார்; 'கூடலுார், பால்மேடு அருகே, கோழிக்கோடு சாலையை அடிக்கடி காட்டு யானைகள் கடந்து செல்வதால், ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் கோழிக்கோடு சாலையில், வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இச்சாலையில் குறிப்பிட்ட சில இடங்களை காட்டு யானைகள் கடந்து செல்வது வழக்கம். இதனால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இங்குள்ள ஓவேலி குண்டம்புழா வனப்பகுதியில் இருந்து, இரவில் வரும் காட்டு யானை, பாண்டியார் டான்டீ தோட்டம் வழியாக பால்மேடு அருகே, புளியம்பாறை, மரப்பாலம் கிராமங்களில் முகாமிடுகிறது. அதிகாலை அதே சாலை வழியாக வனப்பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. வனத்துறையினர் இந்த யானையை நாள்தோறும் கண்காணித்து விரட்டினாலும் யானை ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு யானை பால்மேடு அருகே, கோழிக்கோடு சாலையை கடந்து வனப்பகுதிக்கு சென்றது. அப்போது, யானைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வன ஊழியர்கள், சிறிது நேரம் அப்பகுதியில் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். யானை சாலை கடந்த பின், வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'கோழிக்கோடு சாலையில், இரும்புபாலம், பால்மேடு, மரப்பாலம், குடோன் செக்டேம், பொன்வயல், கைதுக்கொல்லி, தேவாலா நீர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அடிக்கடி சாலை கடந்து செல்வது வழக்கம். எனவே, இச்சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ