வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வாழை தோட்டம் பகுதி மக்கள் அச்சம்
கூடலுார்; மசினகுடி வாழை தோட்டம் அருகே, காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மசினகுடி வாழை தோட்டம், பகுதியில் செல்வராஜ்,52, மற்றும் அவரின் குடும்பத்தினர், 3 பேர் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த மக்னா யானை வீட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது. வீட்டில் இருந்தவர்கள், சப்தம் கேட்டு அச்சமடைந்து, தவித்தனர். அப்பகுதியினர் வந்து யானையை விரட்டினர்.தொடர்ந்து, மீண்டும் அந்த யானை காலை, 6:30 மணிக்கு வாழை தோட்டம் சாலையில் நடந்து வந்து, கடையை சேதப்படுத்த முயற்சித்தது. மக்கள் சப்தமிட்டு விரட்டினர். சேதமடைந்த வீட்டை, வனவர் மோகன்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.மக்கள் கூறுகையில், 'இந்த யானை ஏற்கனவே கடந்த வாரம், ஒரு கடை மற்றும் இரண்டு வீடுகளை சேதப்படுத்தி சென்றது. தற்போது, இந்த வீட்டை சேதப்படுத்தி உள்ளது. இதே நிலை மீண்டும் தொடர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.