வனத்தை அலங்கரிக்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் வனங்களை அலங்கரிக்கும், மஞ்சள் நிற காட்டு சூரியகாந்தி மலர்கள் பார்வையாளர்களை கவர்கிறது. கூடலுார் பகுதி வனப்பகுதியில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள் காணப்படுகிறது. அதில், ஒவ்வொரு காலநிலைக்கும் ஒவ்வொரு விதமான பூக்கள் பூத்து வனப்பகுதிகளை அலங்கரிக்கிறது. தற்போது. ‘ஆஸ்டரேசியே’ எனும் தாவர குடும்பத்தை சேர்ந்த, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட காட்டு சூரியகாந்தி பூக்கள் அதிகளவில் பூத்து காணப்படுகிறது. பசுமையான வனங்களுக்கு மத்தியில், மஞ்சள் நிறத்தில் பூத்து காணப்படும் இந்த பூக்கள் டிச., மாதம் வரை காணப்படும். இவற்றை இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணரிப்பை தடுக்க வேலி தாவரமாகவும் பயன்படுத்துகின்றனர். சாலையோர வனங்களில் காணப்படும் இந்த பூக்களை, இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து ‘போட்டோ’ எடுத்து மகிழ்கின்றனர்.