உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆகாய தாமரை அகற்றப்படுமா? படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

ஏரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆகாய தாமரை அகற்றப்படுமா? படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி

ஊட்டி: ஊட்டி ஏரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆகாய தாமரையால், கட்டணம் செலுத்தி படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி படகு இல்லம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்கின்றனர். படகு இல்ல ஏரியை பராமரிக்கவும், ஆகாய தாமரையை அக்கற்றவும் போதிய அக்கறை காட்டவில்லை. இதனால், 50 ஏக்கர் கொண்ட ஏரியில், 30 ஏக்கர் வரை ஆகாயதாமரை படர்ந்து, ஏரியின் இயற்கை எழிலையும், படகு சவாரியையும் பாதிக்கிறது. அடர்த்தியாக படரும் இந்த செடிகளால் மிதி படகுகள், துடுப்பு படகுகள் ஆங்காங்கே சிக்கி கொள்கின்றன. படகு சவாரி முடிந்து வரும் போது, அவற்றை நிறுத்துவதிலும் சிக்கில் ஏற்படுகிறது. ஏரியின் பரப்பை இவை மூடுவதால், தண்ணீருக்கு கீழ் இருக்கும், மீன் உட்பட நீர்வாழ் உயிரினங்களுக்கான சூரிய ஒளி; ஆக்சிஜன் செல்ல முடியாத சூழலும் ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் இந்த செடிகளுக்கு இடையே கொசுக்கள் மற்றும் பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாவதுடன், சுற்றுலா பயணியர் சிரமத்திற்கு இடையே படகு சவாரி செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தவிர , சாக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஏரியில் கலப்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படகிறது. மேலும், மழை தொடரும் பட்சத்தில், ஆகாய தாமரை ஏரியில் வேகமாக பரவி வருவது வாடிக்கையாகி விட்டது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் காட்டி வருவதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவ்வப்போது சில தொழியாளர்கள் நவீன இயந்திரங்கள் இல்லாமல், கைகளில் இவற்றை அகற்றுவதால் எந்த பயனும் இல்லை. ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் சுற்றுலா பயணிகளால் வரும் நிலையில், இந்த ஏரியை துாய்மையாக பராமரிப்பதில், மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை. நீர்வளத்துறை அதிகாரி அருண் பிரகாஷ் கூறுகையில்,''ஏரியில் படர்ந்துள்ள ஆகாயதாமரை அகற்றும் பணி 'ரொட்டினாக' மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்றும் பணியை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் யுவராஜ் கூறுகையில்,''ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்ற மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்