மலையில் தொடரும் மழையால் பசுமையாக காணப்படும் பல்லுயிர் வாழ்விடம்! தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுமா?
குன்னுார்; 'குன்னுார் சாலையோரத்தில் உள்ள அடர்த்தியான வனப்பகுதிகள், கருங்குரங்கு, யானைகள், இருவாச்சி மற்றும் பல்லுயிர்களின் வாழ்விட பகுதிகளாக மாறி வருவதால், இப்பகுதிகளில் காட்டுமான பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குன்னுார்- - மேட்டுப்பாளையம் மலை பாதையோர வனப்பகுதிகள் அடர்த்தியாக மாறி, பசுமை சூழ்ந்த மரங்கள் இயற்கை சூழலுக்கு மாறி உள்ளன. குறிப்பாக, பக்காசூரன் மலை, சிங்காரா மலை அடிவார பகுதியில் பசுமை போர்த்தி மழை காடுகள் மற்றும் இயற்கை காட்சிகள் மலைபாதை வழியாக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனங்களை கொள்ளை கொள்கிறது. யானை வழித்தடப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தட பகுதியாக உள்ள இந்த பகுதிகளில், யானைகள் மட்டுமின்றி, கரடி, காட்டெருமை, மான், கருங்குரங்கு, இருவாச்சி உட்பட பல்வேறு பறவைகளின் வாழ்விட பகுதிகளாக மாறி உள்ளன. இதுமட்டுமின்றி, அதிகளவில் ராஜநாகமும் இங்கு தென்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதிக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு வந்த கருங்குரங்கு கூட்டம் இப்பகுதியில் தங்களது வாழ்விட பகுதிகளாக மாற்றியுள்ளன.இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மலையடிவார பகுதிகள் சமீப காலமாக அழிக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டி உள்ள எஸ்டேட் அருகே உள்ள பட்டா இடங்கள்; தனியார் காடுகளில் மரங்கள், செடிகள் வெட்டப்பட்டு கட்டட காடுகளாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வனம் சூழ்ந்த இப்பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள தேக்கு, பலா உள்ளிட்ட பட்டியல் வகைகள் மரங்கள் விதிகளை மீறி சில அரசு அதிகாரிகளை மறைமுக உடந்தையுடன் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, பல சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை (நெஸ்ட்) நிறுவன தலைவர் சிவதாஸ் கூறுகையில், ''குன்னுார் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற மழை இருந்ததில்லை. மலை அடிவார பகுதிகளாக, உள்ள பர்லியார்; கூடலுார் நடுவட்டம் பகுதிகளில் தென்மேற்கு, வடமேற்கு பருவங்களில் மழை அதிகரித்துள்ளது. இதனால் அடர்த்தியான வனம் உருவாகி உள்ளது. கருங்குரங்கு, இருவாச்சி போன்ற அரிய வகை பறவைகள், தற்போது இப்பகுதியை வாழ்விடமாக மாற்றி உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில், கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு இனி நிரந்தர தடை விதிக்க வேண்டும். தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இங்குள்ள நிலங்களை வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
சட்டம் என்ன சொல்கிறது...
தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு தனியார் வனங்கள் (மேலாண்மை அனுமானம்) சட்டம் ஆகியவற்றின் கீழ், தனியார் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பது மற்றும் தொடர்புடைய உரிமைகளை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. அதே நேரத்தில், 1961 ல் சட்ட பிரிவில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட தனியார் காடுகளின் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்த அனுமதி உள்ளது. இதை அரசு தீர்மானிக்கிறது. இதன்படி, மசினகுடி பகுதியில் உள்ள யானை வழித்தடங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இயற்கை வளங்களை பாதுகாப்பது கடமை
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், நீலகிரி, மலைப்பகுதி களின் தனித்துவமான இயற்கை வளங்களை, பாதுகாக்க தமிழ்நாடு மலைப் பகுதிகள் பாதுகாப்பு சட்டம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டவை உள்ளன. மலை பகுதிகளில், சாலை அமைப்பது, தனியார் உரிய அனுமதி பெற்று முதிர் மரங்கள் வெட்டுவ தும் தடுக்க முடியாது. மேட்டுப்பாளையம்- குன்னுார் மலையடிவார பகுதிகள் யானைகள் சீசனுக்கு வந்து செல்லும் இடம். இங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது கடமை என்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.