நீதி கிடைக்குமா...! எங்கே செல்கிறது பழங்குடியினருக்கான நிதி; குடிநீர், கழிப்பிடம் இல்லாமல் மக்கள் அவதி
பந்தலுார் : பந்தலுார் பகுதியில், கழிப்பிடம் மற்றும் வீடு வசதியில்லாமல் பழங்குடியின மக்கள் காலங்காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், குரும்பர், பணியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய, 6 வகை பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.மாவட்டத்தில், 28 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், கூடலுார் வருவாய் கோட்டத்தில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அந்த நிதி எங்கு செல்கிறது என்று தெரியாத நிலையில், பழங்குடி மக்கள் இன்றும் குடிசை வீடுகளிலும், கழிப்பிட வசதி இல்லாமலும் வாழ்ந்து வரும் அவலம் தொடர்கிறது. பிரச்னைகள் தீரவில்லை
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வீடற்ற பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட, 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததுடன், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த,3 கோடி ரூபாயும், சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள, 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், இந்த நிதி எந்த பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. மேலும், பழங்குடியினருக்கான துணை திட்டத்தில், நீலகிரி மாவட்டம் விடுபட்டு உள்ளது. அதிகளவிலான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் நீலகிரி மாவட்டம், துணை திட்டத்தில் விடுபட்டுள்ளது அம்மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சேரங்கோடு ஊராட்சி, 9-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளாரங்குன்னு பழங்குடியின கிராமத்தில் குடியிருக்கும், 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் வீடு வசதி இல்லாமலும், கழிப்பிட வசதி இல்லாமலும் வாழ்ந்து வரும் அவலம் தொடர்கிறது. குடிசையில் தொடரும் வாழ்க்கை
கடந்த, 1995 ஆம் ஆண்டு சி.டி.ஆர்.டி. தொண்டு நிறுவனத்தின் கீழ், 12 குடும்பங்களுக்கும், வீடுகள் கட்டி தரப்பட்டது. தொடர்ந்து, வீடுகளை சீரமைக்கவோ, புனரமைக்கவோ ஊராட்சி நிர்வாகம் முன் வராத நிலையில், தற்போது இந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள பலர் தற்காலிக குடிசையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் மாவட்ட கலெக்டரை பலமுறை நேரில் சந்தித்து நேரில் புகார் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஊராட்சியில், 100 சதவீத கழிப்பிட வசதி ஏற்படுத்தி தந்து விட்டதாக கூறும் நிலையில் அரசு நிர்வாகத்துக்கு, இங்குள்ள மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது குறித்து இதுவரை தெரியவில்லை. காட்டுநாயக்கர் சமுதாய சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ''பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய-, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி பெரும்பாலும் எங்கு செல்லுகிறது என்பது தெரியவில்லை. ஆனால், எங்கள் மக்களின் வாழ்க்கை குடிசைகளில் நடந்து வருகிறது. இதுவரை குடிநீர் குழாய்; கழிப்பிடம் பாக்காத பல குடும்பங்கள் இப்பகுதிகளில் உள்ளது. இந்த நிலை மாற, தற்போதைய கலெக்டர் முழு ஆய்வு மேற்கொண்டு, மண்ணின் மைந்தர்களான எங்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்,'' என்றார்.