இரண்டாவது முறையாக பெண் தீக்குளிக்க முயற்சி; மனு மீது நடவடிக்கை எடுக்காததால் வேதனை
ஊட்டி; தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோத்தகிரி அருகே உள்ள பங்களாபாடி அரக்காடு பகுதியை சேர்ந்தவர் சமீமா. இவருக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை மீட்டு தரக்கோரி பலமுறை கோத்தகிரி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.நடவடிக்கை இல்லாததால், கடந்த ஆண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்து, அவரை அனுப்பி உள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை இரண்டாம் முறையாக, கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். 'தரையில் அமர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோஷங்கள் எழுப்பினார். திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க போவதாக தெரிவித்தார்.அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போலீசார் அழைத்துச் சென்றனர்.