உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தங்க நகைக்காக தோழி கொலை பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

 தங்க நகைக்காக தோழி கொலை பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

ஊட்டி: குன்னுார் அருகே தங்க நகைக்காக, தோழியை கொலை செய்த வழக்கில், இளம் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குன்னுார் உபதலை ஆலோரை பகுதியை சேர்ந்த மோசஸ் மனோகரன் மற்றும் ஜோதிமணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்த நிலையில், தம்பதிக்கு, 13 மற்றும் 8 வயதில், இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த நிர்மலா எஸ்தர், தனது தோழி ஜோதிமணியிடம் அடிக்கடி கடன் வாங்கி வந்துள்ளார். மேலும், நிர்மலா எஸ்தரின் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் நிதி நிறுவனத்திடம் வீட்டை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். தவணை கட்ட முடியாததால், நிதி நிறுவனத்தினர் கடன் கேட்டு வீட்டுக்கு வந்த நிலையில், பிரச்னையை சமாளிக்க மீண்டும் ஜோதிமணியிடம் பணம் வாங்க நிர்மலா எஸ்தர் முடிவு செய்துள்ளார். கடந்த, 2022 அக்., 1ம் தேதி நிர்மலா எஸ்தர் கடன் கேட்ட போது, ஜோதிமணி பணம் இல்லை என கூறியதால், கழுத்தில் இருந்த நகையை பறிக்க, நிர்மலா எஸ்தர் தனது மாமனார் மணி,75, என்பவரை உதவிக்கு அழைத்து, ஜோதிமணியை தரையில் தள்ளியுள்ளார். அதில், தலையில் காயம் அடைந்த ஜோதிமணி மயங்கியுள்ளார். அருகில் இருந்த சேலையை எடுத்து, ஜோதிமணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் ஜோதிமணியின் கணவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், 'நிர்மலா எஸ்தர் மற்றும் அவரது மாமனார் மணி ஆகியோர், நகைக்காக ஜோதிமணியை கொலை செய்து, உடலை மறைத்து வைத்திருந்தனர்,' என, தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த அருவங்காடு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்து நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், நிர்மலா எஸ்தருக்கு ஆயுள் தண்டனை; அவருடைய மாமனார் மணிக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். அரசு தரப்பில், வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ