அவசர தேவைக்கு பயன்படும் வகையில் புதிய கரால் முதுமலையில் அமைக்கும் பணி தீவிரம்
கூடலுார்: முதுமலை, பாம்பக்ஸ் பகுதியில், அவசர தேவைக்கு பயன்படுத்தும் வகையில், கரால் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலுார், ஓவேலி பகுதியில், 12 பேரை தாக்கி கொன்ற 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை பிடிக்கும் பணி கடந்த மாதம், 16ம் தேதி துவக்கப்பட்டது. யானை பிடிக்கப்பட்டால், அதனை கராலில் (யானை பந்தி) அடைத்து, பின் வனத்தில் விட முடிவு செய்தனர். ஆனால், கரால் அமைக்கும் பணி தாமதமானால், யானையை பிடிக்கும் பணி சில நாட்கள் தள்ளி போனது. முதுமலை அபயாரண்யம் யானைகள் முகாமில், கரால் அமைக்கும் பணி, 18ல் துவங்கி 21 தேதி நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 23ம் தேதி கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அபயாரணயம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்தனர். அந்த யானைக்கு பசுந்தழைகள் உணவாக வழங்கப்பட்டு வருவதுடன், வன ஊழியர்கள், 24 மணி நேரம் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, காட்டு யானைகள் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க, அவசர தேவைக்கு பயன்படுத்தும் வகையில் முதுமலை பாம்பக்ஸ் பகுதியில், வனத்துறையினர் புதிய கரால் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை துணை இயக்குனர் கணேசன் கூறுகையில், ''ஓவேலில் பிடிக்கப்பட்டு கராலில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானை, தொடர்ந்து அதன் சூழல் மாறாமல் கண்காணித்து வருவதுடன் உணவாக பசுந்தழைகள் வழங்கப்பட்டு வருகிறது. தேவையின்றி அதன் அருகில் யாரும் செல்வதில்லை. வன ஊழியர்கள், யானை பாகன்கள், உதவியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அவசர தேவைக்கு பயன்படுத்தும் வகையில், பாம்பக்ஸ் பகுதியில், எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வகையில் கரால் அமைக்கப்பட்டு வருகிறது,''என்றனர்.