| ADDED : ஜன 02, 2026 06:13 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தராத, அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரம்பாடி டான் டீ பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில், 100க்கும் மேற்பட்ட, டான் டீ தொழிலாளர்கள் குடும்பங்கள், குடியிருந்த நிலையில் தற்போது, 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை, தமிழக- -கேரளா சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த பகுதிக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில், ஆரம்ப காலத்தில் டான் டீ வாகனங்களை பயன்படுத்தி வந்த தொழிலாளர்கள், தற்போது வாடகை ஆட்டோ மற்றும் ஜீப் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சாலை மோசமான நிலையில் சேதமான நிலையில், தனியார் வாகனங்கள் பழுதடைவதால், வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில் தோட்ட தொழிலாளர்கள், இந்த பகுதியை கடந்து கடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள, தேயிலை தோட்ட பகுதியில், வன விலங்குகள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பற்ற சூழலில் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 'சாலையை சீரமைத்து, தெரு விளக்குகள் அமைத்து தந்தால் மட்டுமே ஓட்டு போட வருவோம்,' இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகள் குறித்து குடியிருப்பு பகுதிகளிலும் பேனர் வைத்து உள்ளனர்.