கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி
ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏறப்ட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பாரதி நகரைச் சேர்ந்த இம்மானுவேல் ஜேம்ஸ், 24, இவர் அதே பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நடத்தி வந்தார். பலரிடம் டெபாசிட் தொகை வாங்குவது, கடன் வழங்குவது மற்றும் மொபைல் செயலி வாயிலாக கடன் பெற்று தருவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசு பணியாற்றி வந்தார். நிறுவனத்தில் பொதுமக்களின் பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் சில மாதங்களுக்கு முன்பு இம்மானுவேல் ஜேம்ஸ் கைது செய்யப் பட்டார். ஜாமினில் வந்த இமானு வேல் ஜேம்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்தது தான் இல்லை என்றும், தமிழரசு தான் என போலீசாரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால் போலீசார் இதுவரை அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இம்மானுவேல் திடீரென பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு கையில் சிகரெட் லைட்டரை வைத்தபடி அருகில் யாராவது வந்தால் தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். தனது பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் தீ வைத்துக் கொள்வேன் என சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் இம்மானுவேல் ஜேம்ஸ் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி போலீஸ் ஸ்டேனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இளைஞர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.