ஆம்னி பஸ் -- லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம்
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதிய விபத்தில், லாரி டிரைவர் உட்பட, 21 பேர் படுகாயமடைந்தனர். சென்னையிலிருந்து தாராபுரத்துக்கு, ராயல் ரோடு லிங்க் என்ற ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், 40, ஓட்டினார். பஸ், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் தண்ணீர் பந்தல் பகுதியில் வந்தபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு சென்று ஆம்னி பஸ் மீது மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சின்னாத்தா, 80, காந்திமதி, 60, திண்டுக்கல் மாவட்டம், குப்பமேட்டுப்பட்டி ரெங்கராஜ், 49, லாரி டிரைவரான சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி ரவிக்குமார், 43, உட்பட, 21 பேர் படுகாயமடைந்தனர். பெரம்பலுார் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.