பட்டாசு வாங்க போனவரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி கொள்ளை
பெரம்பலுார்:செங்கல்பட்டு மாவட்டம், மொரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 41. இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, பட்டாசு பாக்ஸ் கொடுப்பதற்காக, சிவகாசியில் பட்டாசு கொள்முதல் செய்வதற்காக, 'மகேந்திரா மேக்ஸி கேப்' வேனை, தானே ஓட்டியபடி, சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், தண்ணீர் பந்தல் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, டூ-வீலரில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வேனை வழிமறித்தனர்.வேனில் இருந்து இறங்கிய யுவராஜை, கத்தியால் குத்தி, மிரட்டி அவரிடமிருந்த, 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பியோடி விட்டனர். தலை, கால் மற்றும் நெஞ்சு பகுதியில் வெட்டு காயம் அடைந்த யுவராஜ், அப்பகுதியில் இருந்த பெட்ரோல் பங்குக்கு சென்று, நடந்த விபரத்தை கூறினார்.அங்கிருந்தவர்கள், பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரில், பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.சம்பவம் நடந்த பகுதியில், சி.சி.டி.வி., கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.