சின்னவெங்காயம் கொள்முதல்; கேரள விவசாய துறை ஒப்பந்தம்
பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில், 14,500 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ராபி பருவத்தில், சின்ன வெங்காயம் வரத்து அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நிலை உள்ளது. குறிப்பாக, கிலோ 10 ரூபாய் என்ற அளவிலேயே வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க, பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்புக் குழுக்கூட்டம் கடந்த 17ம் தேதி நடந்தது.அதன்படி, கேரள அரசின் விவசாய நிறுவனத்தோடு, பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள சின்ன வெங்காய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விற்பனை மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தால், சின்ன வெங்காயத்திற்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.