பள்ளியில் போட்ட தடுப்பூசியால் விபரீதம் மாணவனுக்கு கையில் அறுவை சிகிச்சை
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு செப்., 13ம் தேதி லப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது.அப்போது, பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் வீரமாநல்லுார் கிராமத்தை சேர்ந்த சங்கர்- -- நிர்மலா தம்பதியரின் மகன் அர்ஜூன், 15, என்ற மாணவனுக்கு தடுப்பூசி போடப்பட்டது.தொடர்ந்து, அர்ஜூனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கத்துடன் புண் ஏற்பட்டது. லப்பைக்குடிக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் குணமாகவில்லை. புண்ணின் சுற்றளவு அதிகரித்தது. பெரம்பலுார் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த, 10ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார்.அர்ஜூன் தாய் நிர்மலா கூறியதாவது:தடுப்பூசி போட்ட செவிலியர் போனில் பேசிக் கொண்டே தடுப்பூசி போட்டுள்ளார். கவனக்குறைவாக ஊசி போட்டதால் தான் என் மகனுக்கு இந்நிலை ஏற்பட்டது. இப்போதும் அந்த இடத்தில் வலி உள்ளதாக தெரிவிக்கிறார்.இன்னும் சில வாரங்களில் மீண்டும் ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். அவரால் கையை நீட்ட, மடக்க முடியாமல் மிகவும் வலி, வேதனையை அனுபவிக்கிறார். உயரிய சிகிச்சை அளித்து, என் மகனுக்கு மறுவாழ்வு கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா கூறுகையில், ''மாணவன் அர்ஜூன் உட்பட 49 மாணவர்களுக்கு, 10 வயதுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் நலமுடன் உள்ளனர். தடுப்பூசியால் இவ்வாறு புண் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், தடுப்பூசியால் புண் ஏற்பட்டதா என விசாரிக்கிறோம்,'' என்றார்.