மனைவியை கொன்ற கணவர் தடுத்த மகளுக்கும் கத்திக்குத்து
பெரம்பலுார்: மனைவியை குத்திக்கொலை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல், 50; கட்டட தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள், 45. தம்பதியருக்கு கவிதா, 24, என்ற மகளும், இளவரசன், 22, என்ற மகனும் உள்ளனர்.தம்பதி இடையே ஒரு மாதத்துக்கு முன் குடும்ப தகராறு ஏற்பட்டது. கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கவேல், வீடு திரும்பவில்லை. நேற்று காலை வீட்டிற்கு வந்தவர், மாரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக அவரை குத்தினார். தடுக்க முயன்ற கவிதாவையும் குத்தினார்.சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் உயிரிழந்தார். கவிதாவை அங்கிருந்தோர் மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அரும்பாவூர் போலீசார் தங்கவேலுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.