விராலிமலை கோயில் கோபுரத்தில் ஏறி போராடிய ஆர்வலர் தவறி விழுந்து பலி
புதுக்கோட்டை:விராலிமலை முருகன் கோயில் மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கோயில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர், சமாதானத்திற்கு பின் கீழே இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கொடும்பாளூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம், 43; மாற்றுத்திறனாளி. கல்பனாதேவி என்ற மனைவி, ஹரிகிருஷ்ணன் என்ற, 8 வயது மகன் உள்ளனர். ஆறுமுகம் நேற்று காலை 10:00 மணியளவில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் 70 அடி உயர ராஜகோபுரத்தின் மீது ஏறி உச்சியில் தேசிய கொடியேற்றி கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மலையை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்து, மலையில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். விராலிமலை தாசில்தார் ரமேஷ், போலீசார், அறநிலையத்துறை செயல் அலுவலர் சுதா, அதிகாரிகள் ஆறுமுகத்துடன் பேச்சு நடத்தினர். இவருக்கு ஆதரவாக ஹிந்து முன்னணி அமைப்பினர், மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் அவருடன் பேச்சு நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்திய ஆறுமுகம், பின் தாமாக ராஜகோபுரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். அப்போது வழுக்கியதில் நிலை தடுமாறி கீழே இருக்கும் மணிமண்டபத்தின் மேலே விழுந்தார். தலையில் காயமடைந்த ஆறுமுகத்தை தீயணைப்பு துறையினர் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்து, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர். கோயில் வளாகத்தில் விழுந்து இறந்ததால் நடை அடைக்கப்பட்டு, நேற்று மாலை பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்டது. நிவாரணம் வழங்க கோரிக்கை
உயிரிழந்த ஆறுமுகம் உறவினர்கள் மறியல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்ததும், ஆர்.டி.ஓ., அக்பர் பலி, புதுகை டி.எஸ்.பி., ரமேஷ்குமார் மற்றும் போலீசார் கிராமத்துக்கு விரைந்தனர். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள், ஆறுமுகம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.ஆறுமுகம் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அரசிடம் பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, போராட்டம் எதுவும் இன்றி ஆறுமுகம் உடல் தகனம் செய்யப்பட்டது.