கல்லுாரி பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலி
கீரனுார்:புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே நேற்று முன்தினம் இரவு தட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், நடராஜன், 45; விவசாயி. இவர் தன் மனைவி வெள்ளையம்மாள், 40, என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில் கீரனுார்- புதுக்கோட்டை கொத்தமங்கலப்பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.அப்போது, எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி, 40 மாணவர்களுடன் சென்ற, சமயபுரம் ஸ்ரீராமகிருஷ்ணா என்ற தனியார் கல்லுாரி பஸ், எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தனர்.கல்லுாரி பஸ்சில் சென்ற மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து அறிந்த கீரனுார் போலீசார், இரண்டு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய கல்லுாரி பஸ் டிரைவர், புதுக்கோட்டையை சேர்ந்த சம்பத்குமார், 65, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.