உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கடலில் எல்லையை அறிந்து கொள்ள விசைப்படகுகளில் கருவி பொருத்தம்

கடலில் எல்லையை அறிந்து கொள்ள விசைப்படகுகளில் கருவி பொருத்தம்

புதுக்கோட்டை : கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது, கடலில் எல்லையை அறிந்து கொள்ளும் வகையில், விசைப்படகுகளில், 'டிரான்ஸ்பாண்டர்' எனும் கருவி பொருத்தப்படுகிறது.கடலில் மீனவர்கள் எல்லையை அறிந்து கொள்ளும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், டிரான்ஸ்பாண்டர் கருவியை உருவாக்கியுள்ளது. இவை, தமிழக மீனவர்களின் விசைப்படகுகளில் அரசு சார்பில் இலவசமாக பொருத்தப்படுகிறது.அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 288 டிரான்ஸ்பாண்டர் கருவிகள் வந்துள்ளன. அவற்றை மீனவர்களின் விசைப்படகுகளில் பொருத்தும் பணி நடைபெறுகிறது. புளுடூத் வாயிலாக இக்கருவியை இணைத்து, மொபைல் போன்களில் உள்ள செயலி வழியாக தகவல்களை பெறலாம்.கரையில் இருந்தும், கடலில் உள்ள மீனவர்களிடம் இருந்தும் இரு புறமும் தகவல் பரிமாறலாம்.கடலில் படகு செல்லும் பாதையை காட்டும் இந்த கருவி, இந்திய எல்லையை தாண்டி படகு செல்லும் போது காண்பித்து விடும். புயல், மழை போன்ற காலத்தின் போது ஆழ்கடலில் விசைப்படகுகள் சிக்கி கொண்டால், கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப முடியும்.மேலும், கரையில் மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ முடியும். மீன்கள் அதிகமாக கிடைக்கும் இடங்கள், வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை படகிற்கு அனுப்ப முடியும்.கடலில் ஆபத்து காலங்களில் விசைப்படகுகள் நிற்கும் இடத்தை கண்டறிந்து மீட்க உதவியாக இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை