கருக்கலைப்பு மாத்திரை விற்ற மெடிக்கலுக்கு சீல்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு ஹரியானாவில் இருந்து 100 கிட் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டதாக, அம்மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர், புதுக்கோட்டை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடும்பநல சுகாதார துணை இயக்குநர் கோமதி, அறந்தாங்கி சரக மருந்து ஆய்வாளர் விமல்ராஜ் ஆகியோர், அந்த தனியார் மெடிக்கலுக்கு சென்று ஆய்வு செய்தனர். கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி, விற்பனை செய்தது, ஆய்வில் உறுதி செய்யப்பட்டதால் மெடிக்கல் பூட்டி சீல் வைக்கப்பட்டது.புதுக்கோட்டை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சம்பந்தப்பட்ட மெடிக்கல் உரிமையாளர், ஹரியானா மாநிலம், பஞ்சகுலா பகுதியில் உள்ள தனியார் மொத்த மெடிக்கலில் இருந்து 500 எண்ணிக்கை கொண்ட 100 கிட் கருக்கலைப்பு மாத்திரைகளை, ஆன்லைனில் மார்ச் மாதம் வாங்கியுள்ளார். அதற்கான தொகையை ஜீபேயில் செலுத்தி உள்ளார். இதுகுறித்து, அம்மாநில மருந்து கட்டுப்பாட்டுத்துறையிடமிருந்து வந்த தகவலையடுத்து, மெடிக்கலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாங்கிய அனைத்து மாத்திரைகளையும், டாக்டரின் பரிந்துரை கடிதம் மற்றும் விற்பனை ரசீது, விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால், மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, மெடிக்கலுக்கான லைசன்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.