பள்ளி சிறுமிக்கு தொல்லை இருவருக்கு போலீஸ் வலை
புதுக்கோட்டை:பள்ளிக்கு சென்ற 4ம் வகுப்பு சிறுமிக்கு தொல்லை தந்து கடத்த முயன்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தெற்கு திருநாளுர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 9 வயது மகள், திருநாளுரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். சிறுமி வழக்கம் போல நேற்று காலை, 8:30 மணிக்கு வீட்டில் இருந்து, தன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே பைக்கில், முகத்தில் கர்சீப் கட்டிய இருவர், சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்து பைக்கில் கடத்த முயன்றனர். தன்னை பிடித்திருந்தவரின் கையை கடித்து விட்டு, சிறுமி அங்கிருந்து தப்பி, பள்ளிக்கு வந்து, சம்பவம் குறித்து தலைமையாசிரியரிடம் கூறினார். தலைமையாசிரியர் புகாரின்படி, சிறுமிக்கு தொல்லை தந்து, கடத்த முயன்ற வாலிபர்கள் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரிக்கின்றனர்.