உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / 320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை

320 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு கியூபிரிவு போலீசார் விசாரணை

திருவாடானை: புதுக்கோட்டையில் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை கியூ பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் விசாரணை நடத்தினர். ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக சென்னை கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜன.10 ல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது இறால் கொண்டு செல்லும் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டிகள் இருந்தன. அந்த பெட்டிகளுக்கு இடையில் 10 மூடைகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.போலீசார் 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காரைக்கால் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் 32, பிரகாஷ் 32, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை பகுதியில் இறக்கி அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.இந்த கடத்தலுக்கு தொண்டி மற்றும் நம்புதாளையை சேர்ந்த சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே சென்னை கியூ பிரிவு போலீசார் தொண்டி, நம்புதாளை பகுதியில் விசாரணை நடத்தி இரண்டு பேரை மேல் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !