சுங்கச்சாவடி ஊழியர் போராட்டம் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லேனாவிளக்கில், திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சு, நேற்று முன்தினம் இரவில் தோல்வி அடைந்தது. இதனால், சுங்க சாவடி ஊழியர்கள் சுங்க கட்டணம் வசூல் செய்யாமல் நேற்று மாலை வரை,வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், வாகனங்கள், நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று மாலை வரை கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்றன. அதன்பின், நேற்று மாலை நடந்த பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட்டதால், சுங்கச்சாவடி இயங்கத் துவங்கியது. இங்குள்ள, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், சுங்கவரி வசூலிப்பதில் ஈடுபட்டனர்.முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், 'பாஸ்டேக்' முறையில் கட்டணம் வசூலிக்கும் கருவியையும், 'ஸ்விட்ச் ஆப்' செய்ததால், அதன் வாயிலாகவும் கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதும், வழக்கம் போல பாஸ்டேக் கட்டண வசூல் கருவியையும் இயக்கினர்.