வேங்கைவயல் வழக்கு குற்றப்பத்திரிகை; தள்ளுபடி செய்யக்கோரி மனு தாக்கல்
புதுக்கோட்டை : வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதை தள்ளுபடி செய்யக்கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவையல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.'குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் இருப்பதுடன், இந்த வழக்கின் முதல் புகார்தாரரான கனகராஜ் விசாரிக்கப்படவில்லை. எனவே, குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது; தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கனகராஜ் சார்பில், அவரது வக்கீல்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி உத்தரவிட்டுஉள்ளார்.இதற்கிடையே நேற்று வேங்கைவயலில் அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாக கருப்புக்கொடி ஏந்தி, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பந்தல் அமைக்கக்கூடாது என போலீசார் எதிர்ப்பு தெரிவித்து தடை செய்தனர். இதனால், வேங்கைவயல் மக்கள் வெயிலிலும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.