UPDATED : மே 31, 2024 09:01 AM | ADDED : மே 30, 2024 03:07 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இக்கோயிலில் கன்வர், காலவர், புல்லரிசி என்ற மூன்று முனிவர்களும் பெருமாளை காட்சி தருமாறு வேண்டி தவம் செய்ததில் பெருமாள் அஸ்வத் ரூபம் எனப்படும் அரசமரமாக காட்சி தந்தார். மீண்டும் தவம் செய்து அஸ்வத் ரூபமாக காட்சி தருமாறு முனிவர்கள் தவம் செய்து வேண்டியதால் சதுர் புஜங்கர், கருடன், ஆதி ஜெகநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி உடன் காட்சி தந்து அருளினார். பெருமாள் கோயிலின் பின்புறத்தில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது.புத்திர பாக்கியம் வேண்டி பக்தர்கள் மரத்தை சுற்றி வழிபாடு செய்கின்றனர். கோயில் பட்டாச்சாரியார்கள் கூறியதாவது:கீதையில் பகவான் கிருஷ்ணர் மரங்களில் நான் அரசமரமாக உள்ளேன் என அருளினார். அந்த வகையில் அஸ்வத் மரம் என அழைக்கப்படும் அரச மரத்தின் காய்ந்த பட்டையை பாலில் அரைத்து அருந்தினால் சகல வியாதிகளும் தீரும் என புல்லை அந்தாதி என்னும் பாடல் திரட்டில் கூறப்பட்டுள்ளது.பெருமாள் இடது பாதத்தை மடக்கி வலது பாதத்தை தொங்கவிட்ட நிலையிலும் வலது கரத்தினால் அபயம் அளித்தும் இடது கையை அனணத்தும் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் என்றனர்.அரச மரத்தை மூன்று சுற்றுகள் சுற்றி வழிபாடு செய்கின்றனர்.இதன் அருகே உள்ள இடத்தில் நாக தோஷம் தீர நுாற்றுக்கணக்கான நாகப்பிரதிஷ்டைகள் செய்யப்பட்டுள்ளது. புத்திர பாக்கியம் வேண்டி பாயசம் வழங்கப்படுகிறது.பல்வேறு புராண, இதிகாச சிறப்பை பெற்ற இக்கோயிலின் சிறப்பம்சங்கள் குறித்து பக்தர்கள்,யாத்திரிகர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து செல்கின்றனர்.