| ADDED : மே 06, 2024 12:30 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த விளத்துார், சூரம்புலி ரோட்டை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.திருவாடானையில் இருந்து ஏ.ஆர்.மங்கலம் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் விளத்துார், சூரம்புலி, புத்தனேந்தல், கொன்னக்குடி, ஏ.ஆர்.மங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இந்நிலையில் இந்த ரோட்டில் விளத்துார் முதல் சூரம்புலி வரை 2 கி.மீ., ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருவதுடன் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் டிரைவர்களும், மற்ற வாகனங்களும் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றனர்.இந்த ரோடு நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் விளத்துார் முதல் சூரம்புலி வரை உள்ள 2 கி.மீ., ரோடு ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. யூனியன் ரோடாக உள்ளதால் சேதமடைந்த ரோட்டை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட யூனியன் அதிகாரிகள் சேதமடைந்த விளத்துார் முதல் சூரம்புலி வரையிலான யூனியன் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.