| ADDED : ஜூலை 11, 2024 04:53 AM
கூடுதல் சுமையால் பணிகளில் தொய்வுஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்பில் செயல் அலுவலர்கள் (இ.ஓ.) நியமிக்கப்பட்டு பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதுடன் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள செயல் அலுவலர்களும் கடும் மன உளைச்சலில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, கமுதி, மண்டபம், முதுகுளத்துார், அபிராமம் ஆகிய ஏழு பேரூராட்சிகள் தற்போது உள்ளன. இந்நிலையில் ஏழு பேரூராட்சிகளுக்கும் ஏழு செயல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் முதுகுளத்துார், அபிராமம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளுக்கும் செயல் அலுவலர் செல்வராஜ்.கமுதி, மண்டபம் பேரூராட்சிகளை செயல் அலுவலர் இளவரசி, சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகளுக்கு மாலதி ஆகியோர் செயல்படுகின்றனர். இந்நிலையில் தொண்டியில் பணியாற்றிய செயல் அலுவலர் மகாலிங்கம் சில தினங்களுக்கு முன் லஞ்சம் வாங்கியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதையடுத்து கூடுதல் பொறுப்பாக செயல் அலுவலர் மாலதி நியமிக்கப்பட்டதால் தொண்டி பேரூராட்சியையும் சேர்த்து மூன்று பேரூராட்சிகளை அவர் நிர்வாகம் செய்ய வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி கட்டுமானப் பணிகள், குடிநீர் திட்டம், சுகாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செயல் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் பொறுப்பு வகிக்கும் செயல் அலுவலர்கள் பணிசுமையால் மன உளைச்சலில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து பேரூராட்சிகளுக்கும் நிரந்தர செயல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.