தெரு மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றப்படும் இந்திய கம்யூ., அறிவிப்பு
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் தெருக்களில் மின் விளக்குகள் எரியாததால் மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றப்படும் என இந்திய கம்யூ., சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.பெரியபட்டினத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் எல்.இ.டி., பல்புகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.ஜன., 5ல் ஊராட்சி தலைவரின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் தறபோது 15 நாட்களுக்கும் மேலாக கம்பங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பெரியபட்டினம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் மின்கம்பங்களில் தீப்பந்தம் நடும் போராட்டம் நடக்க உள்ளதாக தெரிவித்தனர். திருப்புல்லாணி இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் கூறியதாவது :தற்போது பெரியபட்டினம் ஊராட்சியில் குப்பை முறையாக அள்ளாமல் தேக்கமடைந்துள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட டிராக்டருக்கு டீசல் போடுவதற்கு கூட நிதி இல்லை என தெரிவிக்கின்றனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், வெளிச்சம் இல்லாத மின்கம்பங்களில் தீப்பந்தங்களை நட்டு வைக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.