ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பி.டி.ஓ., சண்முகநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஜாக்டோ ஜியோ ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசு ஊழியர்கள் சங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், ஓய்வூதியர் நலச்சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.