நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை உயிர்பலி அதிகரிப்பு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நீர் நிலைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் உயிர்பலி அதிகரித்து வருகிறது.திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும்பாலான கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இந்நிலையில் ஆழம் தெரியாமல் கண்மாய், ஊருணிகளில் இறங்கி குளிக்கும் போது மூச்சு திணறி உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.கடந்த ஆண்டு நெய்வயல் அணிக்கி, அத்தாணி கண்மாய்களில் இருவர் ஒரே நாளில் இறந்தனர். திருவாடானை அருகே அழகமடை கண்மாயில் தாயும், மகளும் இறந்தனர். தொண்டி அருகே பாசி பட்டினத்தில் இரு மாணவிகள் இறந்தனர்.சில நாட்களுக்கு முன்பு பதனக்குடியில் 7 வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி இறந்தார். நீர் நிலைகளுக்கு சென்று மீன்பிடிப்பது, ஆழம் தெரியாமல் குளிப்பது போன்ற சம்பவங்களால் ஆண்டுதோறும் பலி அதிகமாகிறது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆபத்தான கண்மாய், ஊருணிகளுக்கு முன்னெச்சரிக்கை போர்டு வைக்கலாம். பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க முடியும் என்றனர்.