பெரிய கண்மாயில் நீர் இருப்பு 2ம் போகம் சாகுபடிக்கு வாய்ப்பு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரிய கண்மாயில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் இரண்டாம் போகத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொடங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கரில் கொண்ட கண்மாயில் 8.24 மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். ராமநாதபுரம் பெரிய கண்மாயை நம்பி 3968.65 ஏக்கரில் புன் செய் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தொருவளூர், பாப்பாகுடி, குமரியேந்தல், கவரங்குளம், களத்தாவூர், சூரங்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுநாள், நொச்சிவயல், சூரியூர், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னிவயல், சித்துார், லாந்தை ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கண்மாயில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக 5.5 அடி (மொத்தம் 7 அடி) அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக முதல் போகம் அறுவடை முடிந்துள்ள நிலையில் விவசாயிகள் இரண்டாம் போகத்திற்கான விவசாயத்திற்கு தேவையான அளவு நீர் இருப்பு உள்ளது. நெல் சாகுபடி இல்லை என்றாலும் சிறு தானியங்கள் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.