கடையின் முன்பு கழிவுநீர் வாகனம் நிறுத்தி கறார் வரி வசூலில் நகராட்சி வணிகர்கள் அதிர்ச்சி
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் நகராட்சியில் வரி நிலுவை உள்ள கடைகள் முன்பு கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டி வசூலிப்பதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் சொத்து, குடிநீர், குப்பை, பாதாளசாக்கடை வரி என ஆண்டுக்கு ரூ.17 கோடி வரை வரி வசூலிக்க வேண்டும். நடப்பாண்டு வரியுடன், நிலுவையில் உள்ள வரியையும் வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர் மட்டுமின்றி நகரமைப்பு, சுகாதார பிரிவு அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.வரியை செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் பாதாள சக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை செய்கின்றனர். வரி பாக்கி வைத்துள்ள கடைகள் முன்பு கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி கறாராக வரி வசூலிக்கின்றனர்.ராமநாதபுரம் இளங்கோ கூறுகையில், தேவிப்பட்டினம் ரோட்டில் கடையில் மேலாளராக உள்ளேன். 2024-2025 ல் ரூ.2280 வரி இருந்தது. தற்போது 79 ஆயிரத்து 500 ரூபாய் என 49 மடங்கு உயர்த்தியுள்ளனர். வியாபாரம் இல்லை. கால அவகாசம் வழங்க மனு வழங்கினேன். அதனை பொருட்படுத்தாமல் கடைக்கு முன்பாக கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டி வசூலித்தனர். உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், நீண்ட காலமாக உள்ள வரிபாக்கியை செலுத்த வலியுறுத்தும் போது சிலர் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். தற்போது உள்ள வீடு, கடையின் அளவை முழுமையாக அளவிட்டு வரி விதிக்கிறோம்.யாரையும் மிரட்டுவது இல்லை. அபராதம், குடிநீர் நிறுத்தம் போன்ற மேல் நடவடிக்கைகளை தவிர்க்க முன்கூட்டியே நோட்டீஸ் வழங்குகிறோம். கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி கடையில் வரி வசூல் செய்துள்ளது குறித்து விசாரிக்கிறேன் என்றார்.