முன்னறிவிப்பின்றி 1 மணி நேரம் மின்தடையால் மக்கள் சிரமம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னறிவிப்பின்றி ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.கமுதி துணை மின்நிலையத்திலிருந்து முதுகுளத்துார் மின் நிலையத்திற்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. இங்கிருந்து முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கமுதி துணை மின் நிலையத்தில் அவசரப்பணி மேற்கொள்ள இருப்பதாக கூறி முன்னறிவிப்பின்றி மதியம் நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் மக்கள் தவிக்கின்றனர். வணிகர்கள், அரசு அலுவலகங்களில் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கடந்த 15 நாட்களில் மூன்று நாள் முன்னறிவிப்பின்றி ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரியத்தினர் உரிய முன்னறிவிப்பு செய்து மின்தடை செய்ய வேண்டும் என்று வணிகர்கள், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.