ராமநாதபுரம் மீன் வளத்துறை ஊழியர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ராமநாதபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் பனையூர்குப்பம் பகுதியில் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு நடுக்கடலில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மீன் வளத்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் பனையூர்குப்பம் மீனவ கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி கடலோரத்தில் 5 நாட்டிக்கல் மைல் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். படகில் ரோந்து சென்ற செங்கல்பட்டு மீன் வளத்துறை அதிகாரிகள் சட்ட விரோத மீன் பிடிப்பை தடுத்தனர். இதில் ஆத்திரமடைந்த பனையூர்குப்பம் மீனவர்கள் 19 பேர் 4 நாட்டுப்படகுகளில் வந்து அதிகாரிகள் படகை கயிற்றால் கட்டி 12 நாட்டிக்கல் மைல் துாரம் நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அதிகாரிகளை அவதுாறாக பேசி கடலில் தள்ளிவிட்டு கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து செப்.4 ல் மீன் வளத்துறை அதிகாரிகள் அளித்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதித்தனர். மீன் வளத்துறை இயக்குநர் தலையீட்டிற்கு பின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரைக்கூட போலீசார் கைது செய்யவில்லை. இதனை கண்டித்தும், மீன் வளத்துறை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.