இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் நாட்டுப்படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மண்டபம் வேதாளை சூடைவலைகுச்சி கிராமத்தில் நேற்று அதிகாலை மண்டபம் சுங்கத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த ஒரு நாட்டுப்படகை சோதனையிட்டனர்.அதில் 80 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது. இதனை இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். சுங்கத்துறையினர் நடமாட்டத்தை கண்டதும் கடத்தல்காரர்கள் தலைமறைவாகினர். இவர்களை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.16 லட்சம். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகில் பதிவு எண் இல்லாததால் இதன் உரிமையாளர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த 3 ஆண்டுகளில் பாம்பன், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், பீடி இலை, மாத்திரைகள், காலணிகள் உள்ளிட்ட சில பொருள்களை கடத்துவது அதிகரித்துள்ளது.இதில் 10 சதவீதம் மட்டுமே சிக்குகிறது. தொடர்ந்து கடத்தல் நடப்பதால் கடல் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.