மேலும் செய்திகள்
1690 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
06-Jun-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் 'ராஷ்டீரிய கிரிஷி விகாஸ் யோஜனா' திட்டத்தில் ''ஒரு துளி நீரில், அதிக பயிர்'' என்ற வகையில் 1483 எக்டேரில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்காக ரூ. 3 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் 2025--26-ம் ஆண்டிற்கான ராஷ்டீரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தில் 'ஒரு துளி நீரில், அதிக பயிர்' என்ற வகையில் 1483 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.3 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன அமைப்புகளான சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் அதிகபட்சமாக 5 எக்டேர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். துணை நீர் மேலாண்மை திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட குறு வட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நீர் சேமிப்பு அமைப்புகள் நிறுவ 1 கன மீட்டருக்கு ரூ.125 என்ற அடிப்படையில் ரூ.75 ஆயிரம் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறுகளில் மின்மோட்டார் பொருத்த ரூ.15 ஆயிரம் மற்றும் நீர் ஆதாரங்களில் இருந்து நிலத்திற்கு பாசன குழாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்ல அதிகபட்சமாக எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் என மானியமாக வழங்கப்படுகிறது.ராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் கூறுகையில், ஏற்கனவே மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம் அமைத்த விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் முறைக்கு மாற விரும்பினால் 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். அதற்கான மானியம் ஏற்கனவே பெற்ற மானியத்தில் இருந்து கழித்து வழங்கப்படும். அரசு மானியத்தில் ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விவசாயிகள் 7 ஆண்டு காலம் முடித்திருந்தால் இந்த திட்டத்தின் கீழ் மீண்டும் பயன்பெறலாம்.இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் ஆதார், குடும்ப அட்டை நகல், நிலப் பட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயிகள் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். என்றார்.--
06-Jun-2025