உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மானிய டீசல் கட்: ரூ.12.57 லட்சம் இழப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மானிய டீசல் கட்: ரூ.12.57 லட்சம் இழப்பு

ராமேஸ்வரம் ; -மீன்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் நேற்று ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மானிய டீசல் வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் சிலர் தனியார் பங்கில் டீசல் பிடித்ததால் ரூ.12.57 லட்சம் இழப்பு ஏற்பட்டது.தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் மீனவர்களின் ஒரு விசைப்படகிற்கு 1900 லி., மானிய விலையில் டீசல் வழங்குகிறது. இந்த மானிய டீசலை செப்.,1 முதல் செப்.,31ம் தேதிக்குள் அரசு பங்குகளில் மீனவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும்.அதன்படி செப்.1 முதல் டீசல் வழங்குவது வழக்கம். ஆனால் செப்.1 ஞாயிறு விடுமுறை என்பதால் மானிய டீசல் வழங்கும் கோப்பில் சென்னையில் உள்ள மீன் துறை உயர் அதிகாரி ஒப்புதல் கையெழுத்து போடவில்லை. இதனால் செப்.2ம் நாளான நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு பங்குகளில் டீசல் கேட்டதற்கு டீசல் வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.இதனால் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் வேறு வழியின்றி தனியார் பங்குகளில் லிட்டர் ரூ.94.60 க்கு (மானிய டீசல் ரூ.78.60) ஒரு படகிற்கு 300 லி., வீதம் வாங்கி 262 படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதனால் லிட்டர் ரூ.16க்கு கூடுதலாக வாங்கியதால் ரூ.12.57 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறுகையில், இலங்கை கடற்படை கெடுபிடி, இயற்கை சீற்றத்தால் ஒரு மாதத்தில் 5 முறை கூட மீன்பிடிக்க முடியாமல் கடனில் சிக்கித் தவிக்கிறோம். இச்சூழலில் விடுமுறை நாளான செப்.1ல் அதிகாரிகள் ஒப்புதல் வழங்காததால் மானிய டீசலும் வழங்காதது கண்டனத்திற்குரியது.ஆக., மாத மானிய டீசலை மீனவர்கள் முழுவதும் பிடிக்காத நிலையில் அரசு பங்குகளில் 4.20 லட்சம் லிட்டர் இருப்பு உள்ளது. இதனை செப்., மாதம் ஒதுக்கீட்டில் பகிர்ந்து வழங்கி இருக்கலாம். வழங்காததால் 400 படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.இலங்கை கடற்படை தாக்குதல் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மானிய டீசல் வழங்காமல் அதிகாரிகள் தாக்குதல் நடத்துவது வேதனை அளிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ