| ADDED : ஜூலை 29, 2024 10:36 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் கிராம மக்கள் ரோடு வசதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பரமக்குடி ஒன்றியம் எஸ்.காவனுார் பகுதியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளாக ரோடு வசதி செய்து தராமல் உள்ளனர். இதன்படி எஸ்.காவனுாரில் இருந்து முத்துச்செல்லாபுரம் மற்றும் மேலக் காவனுாரில் இருந்து எஸ்.காவனுார் செல்லும் வகையில் ரோடு தேவை உள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் செவி சாய்க்காததால் காவனுார், மருந்துார், என்.பெத்தனேந்தல், வெங்கிட்டான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேர் வரை முதுகுளத்துார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.தாசில்தார் சாந்தி, டி.எஸ்.பி., சபரிநாதன் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.காவனுார் கிராமத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் ரோடு பணி குறித்து உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.பின்னர் கிராம நெடுஞ்சாலை உதவி பொறியாளர் தினேஷ் 45 நாட்களுக்குள் ரோடு அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து ஒரு மணி நேரம் வரை நீடித்த ரோடு மறியல் கைவிடப்பட்டது. பள்ளி மற்றும் பணிக்குச் செல்லும் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.